அது ஒரு 'டப்பா' காமிராதான் ...!
&
அது ஒரு 'டப்பா' காமிரா தான் --
ஒரு கிட்டப் பார்வைக் கண்ணாடி
என்றும் கூடச் சொல்லலாமே !
ஆம்.. பழைய காலம்தான்--
அது வாயை மட்டும் திறந்து
வந்து விழுந்ததை விழுங்கும்
குருட்டு மனனம் செய்யும்
பள்ளி மாணவன் போல் !
கூர்ந்தும் நோக்காது-
'பளிச்' என மூளையில்
பதிந்தும் கொள்ளாது --
அதற்கே என்ன ' ஸ்டைல் ' செய்தோம்
ஹாலிவூட் திரைப்படம் எடுப்பது போல் --
உருட்டிப் புரட்டி சிலநாள் எடுத்தபின்னே
கடையில் கழுவக் கொடுத்து
தேர்வு எழுதிய மாணவன்போல்
'திக் திக்' எனத் தவம் கிடந்து பார்க்கையில்
எல்லாமே வெண் அல்லது கறுமேகங்கள்போல் !
எது எது யார் யார் என்றே புரியாது --
தெரிந்தாலோ எல்லாம் புள்ளி மயம் !
ஐம்பது ஆண்டுகள் ஆன படம்---
என்னோடு சேர்ந்து கிழண்ட படம் !
காலம் பசியில் தின்ற படம் -
மஞ்சள் நிறைவாய்க் குளித்த படம் !
அதில் இருப்பவர் சிலர்
உலகில் இல்லாத படம் !
எப்படி இருந்தால் நமக்கென்ன ?
எடுத்து பார்க்கையில் வெடிக்கும் பரவசத்தை
எழுத்தில் குரலில் இயன்றிடுமோ !
புது வெள்ளமாய் புரண்டிடும் நினைவுகள் -
பாசம் தோய்ந்த அப் பார்வைகள் -
அந்நொடியில் உறைந்திட்ட குறுஉரைகள் --
பின் புலமாய்த் திகழ் இயற்கைத் தோற்றங்கள் --
அசட்டுச் சிரிப்புக்கள் .விழி மூடல்கள் எனக்
காலத்தின் ஆழத்தில் நமை அழுத்தி
அந்நறுமணக் குழலை உட்செலுத்தி
இந்நொடிகளை மாலை மயக்கமாக்கிடுமே !
இதயம் பூவாய் மலர்ந்திடுமே !
விழிகளில் கண்ணீர் மொக்கிடுமே !
&
சந்திர கலாதர்
No comments:
Post a Comment