Sunday, August 7, 2011

EMPTY YOUR HEART OF INCONSOLABLE MISERIES

அழுது தீர்த்துவிடு , மனமே !
[ சில சொல்லமுடியாத துன்பங்கள் தலை வெடிக்கச் செய்கையில் ]
&
அழுது தீர்த்துவிடு -
இதயமே !
இப்பொழுதே அனைத்தையும்
அழுது தீர்த்துவிடு .
&
உறக்கப் போர்வையுள் உருளும் புவி -
தேய் பிறை முதற் பருவம் -
குறைப்பட்ட குளிர் நிலவு -
அமைதியான இரவு -
ஓசையின்றி விரையமாகும்
பால் வெண்மைச் ' சாந்தி ' -
இதுவே உன்னதத் தருணம் !
&
சட்டெனவே கிழக்கிருந்து பாய்ந்தேறி
அனைத்தையும் சீறி விழுங்கவரும்
வைகறையின் ஓங்கார வெள்ளத்துள்
சிக்குண்டு மூழ்கி மறைவதற்குள்
அழுது தீர்த்துவிடு ,இதயமே
உடனே அழுது தீர்த்து விடு !
இதுவே உன்னதத் தருணம் !
&
உருக்கிக் கரைத்துவிடு --
நெஞ்சமே !
இப்பொழுதே அனைத்தையும்
உருக்கிக் கரைத்துவிடு --
நொதித்த இதயப் புண்களின் செந்நிற வாய்கள் மீது
கடுங்கொடுமையாய் அழுத்திடும் துன்பக் கோளமதை
ஆத்மாவின் பெருமூச்சில் உன் பாடற் தீநாக்குகளின்
அசுர வெம்மையிலே -
உருக்கிக் கரைத்துவிடு ,நெஞ்சமே
உடனே உருக்கிக் கரைத்துவிடு !
&
விசிறி எறிந்துவிடு -
மனமே !
அனைத்தையும் விசிறி எறிந்துவிடு --
வல்லவன் வாழ்க்கையோடு போராடிக் களைத்தபோது
காவலற்ற மேனியெல்லாம் அவன் கொட்டிக் குவித்துவிட்ட
துயர்ப் புழுதி மலையினை --
&
படபடத்து விரையும் இக்குளிர் காற்று
காலை கதிரவனின் வெஞ்சாட்டையடி தின்று
மலைத்து நிலைத்திடுமுன் நீ கைகையாய்
அள்ளியள்ளித் தூற்றிவிடு -
அனைத்தையுமே மனமே
விசிறித் தூற்றிவிடு !
&
----சந்திர கலாதர்

No comments:

Post a Comment