மௌனத்தில் கனிந்தேன் .!
&
&
இளங்காலை நேரம்--
இந்த எளியவனை எதிரில் அமரச் சொல்கிறாய் ;
இமைத் திரை இறக்கச் சொல்கிறாய் -
"தியானி !"-
பணித்தலா ? பனித்தலா இது!
கட்டளையா ?
தென்றலின் தழுவலா ?
மென்மையாய் உன் குரல் ரீங்கரிக்கின்றது -
விழி விசிறிகளை நீயும் இறக்குகிறாய் !
தியான தீபம் உன்னில் சுடர் பூக்கின்றது -
தவழ் தென்றலில் மலர்களின் மாய மணம்
உயிரினை மூழ்கச் செய்கிறது -
காலம் சற்றுத் தவழ்கிறது -
என்னுள் இனம் புரியா ஒரு படபடப்பு ;
இமைகள் சிறகு விரிக்கின்றன !
என் விழிகளின் முன் உன் பேரழகு !
நிலவென வருடும் அமைதி -
கூசாத அலையாத ஒளி விரிவுகள் -
குழந்தையாய் உறங்கும் தியானம் !
உளமார ரசிக்கிறேன் -
கால மொட்டு எப்பொழுது கனியாயிற்று ?
தியானம் விழிக்கிறது -
"என்ன உண்மை கனிந்தது?" -வினவுகிறாய் -
உன் கேள்வி எனை மெல்ல வளைக்கிறது ;
என்ன சொல்வேன் ?
நாலாபுறமும் ஒரு நொடி
விடையைத் தேடி விழி பறக்கிறது !
மறுநொடி...
"மௌனத்தில் கனிந்தேன் ;
பேரழகில் கலந்தேன் !"
உன் முத்துச் சிரிப்பொலி
செவிகளிலே கலகலக்கிறது !
&
சந்திர கலாதர்
No comments:
Post a Comment