Saturday, August 13, 2011

dumb joys

ஒன்றா இரண்டா ஊமை சந்தோஷங்கள் !
&
எல்லாமே நல்லபடியாய்த்தான் சென்றது
குடும்ப ரயில் எல்லோரோடும்
தண்டவாளத்தில் நன்றாகத் தான் ஓடியது;
வழிகாட்டி விளக்கு சுணங்கிப் போனதா இடையில் ?
எதிர் வண்டியோடு மோதித் தடம் புரண்டது ;
எனதின் ஒரு பகுதி எதிர் வண்டிக்குள் புகுகிறது-
என் பகுதி காயங்களுடன் மறு பாதைக்குள் நுழைகிறது
ரணங்களுடன் இரு வேறு பாதைகளில் பயணிக்கின்றன -
சந்திக்க இனி வாய்ப்புக்கள் எந்த நிலையத்திலோ என்றோ ?
வாழ்க்கை எதையும் ஜீரனிக்கப் பார்க்கிறது--
முடிகிறதா ? வழுக்குகிறதா ?வதை செய்கிறதா ?
&
கடந்ததின் பதிப்புகள் நிழற்படங்களாய்
என் முன் இறைந்து கிடக்கிறது --
விடை கொடுத்தாயிற்றே இன்னும் ஏன் இந்தக் கரிசனை ?
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கதை பின்புலமாய்--
ஒவ்வொரு உறைந்த நொடியிலும்
பதிப்பின் உணர்வு நதிகள் நினைவு புரண்டு தாக்குகின்றன --
" இதை ஒதுக்காதே ; இது தனித்தது ;உன்னோடு ஒன்றியது !" எனப்
பொல்லா மனம் புலம்பித் தவிக்கிறது --
அவன் அல்லது அவள் பொக்கை வாயாய்,பொன் சிரிப்பாய் ,
மழலை நதியாய், துள்ளு அணிலாய் , சிட்டுக் குருவியாய் ,
விளையாட்டுப் பம்பரமாய் ,வீம்பாய்,அழுகையாய் ,
அடமாய் , அடங்காப் பிடாரியாய் ,நாளொரு மேனியாய் ,
கொள்ளைப் பேச்சாய் , பள்ளிப் பாலகனாய் ,
ஆடை வனத் தேவனாய் ,அழகு மலராய் ,
கல்லூரித் தோழருடன் சுற்றுலா விடுதலையாய் ,
தோளையும் மீறிய வளரச்சியாய்,மீறிய பேச்சாய் ,
மணமேடை நாயகனாய் ,பின் மனமேடை அகன்றவனாய் --
ஓ..! எத்தனை அவதாரங்களாய் ?
மனம் ஒப்பவே இல்லையே !
வண்ணப் படங்களை மங்கியே போயினும் -
நினைவுகள்தான் மனப் பாறையில் கீறிப்போயினவே-
கணினியில் வன்பொருள் தகட்டில் அலசி ஏற்றுகிறேன் --
எனக்குத் தொடர்புண்டோ சற்றும் இல்லையோ --
அவனு[ளு ]க்கு உண்டாயின் அதுவே போதும்;
அவனே அதில் இல்லாது போயினும்
அவன் கை காமிரா அந்நேரம் ஏந்தி நுழைத்திருக்கும் ;
அது அல்லது அந்நண்பர்கள் அவனின் மகிழ்வு நாதங்கள் ;
அவன் கும்மாளத்தில் சிரிப்பில் எத்தனை சுவைகளோ ?
அவன் சிரிப்பில் என் இறைவனை அன்றோ
இம்முதுமையிலும் மனம் கண்டு கொள்கிறது --
வாலிபம் இதை இன்று கவனம் கொள்ளாது ;
பின் அசைபோடும் ஓய்வில்
நினைவு இனிப்பில் நனையும் ; முகம் மெல்லப் பூக்கும்--
அன்று ஓர் நொடி எனை நினைத்தாலும்
அதிலே ஆயிரம் சந்தோஷம் தானே !
ஒன்றா இரண்டா வாழ்க்கையில்
இந்த ஊமை சந்தோஷங்கள் !
&
------சந்திர கலாதர்

No comments:

Post a Comment