அம்மா ! உனக்கு மட்டும் எப்படி...?
[ பகுதி -- 2 ]
[ பகுதி -1 ] [29.07.2011 FB யில் ]
&
அம்மா !
உனது வாழ்வோ குண்டும் குழியுமாய்த் தனிவழிச் சாலை --
துரதிருஷ்டம் விதியெனும் துள்ளிப் பாயும் வலிய குதிரைகள்
உன் காலத் தேரினை இழுத்துச் செல்வன --
வயோதிகத் தேரின் கனத்த கால்கள்
கரிய சோகம் செவ்வேதனை என்னும் புழுதிப் புயல்களை
அடர்ந்தெழ உதைத்துத் துன்ப ராகம் பாடிச் செல்வன--
கட்புலன் மறைக்கும் புழுதிப்புயலுள் அன்புத் தாயே !
மடியும் அந்தியின் மயங்கிடும் மணிகளில்
சிதைந்த வீட்டின் இருண்ட மூலையில்
சுருங்கிய விழிகளின் குறுகிய இடுக்கில் மங்கிய பார்வையால்
எவ்வறிவுச் சுடரின் ஓங்கிய ஒளியை --
வெட்கப் போர்வையுள் கடுகாய்க் குன்றி
சிலை மௌனம் பெருக்கி உன்முன் நிற்கும் என்னிற் கண்டு
என்னுள் உறங்கிடும் கவிஞனை உசுப்பி அகால வேளையில்
பாடப் பணித்து மெய்சிலிர்க்க வைக்கிறாய் ?
&
ஆனால் இவர்களோ இளமை எழுச்சியின் சுடர்மிகு கண்களால்
ஒளிர் காலைப் பொழுதின் வெளிச்ச அலைகளில்
எத்தகு இருளும் சோக மூட்டமும் என்னுட் கண்டு
இரக்கமே இன்றி இதயம் கிழிபட ஓர் குரல் ஓங்கி
" பைத்தியம் ! பைத்தியம் ! " என விரட்டி அடிக்கிறார் ?
&
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment