Wednesday, August 17, 2011

NATURE THROUGH MY EYES

என் விழிவழி இயற்கை
&
ஐப்பசி மழை ஓய்ந்து பத்து நாட்களாகி விட்டன ...
உலகம் எவ்வளவு பசுமையாய் விரிந்திருக்கிறது !
வானில் சூரிய ராகங்கள் இழைகின்றன ;
வெண்ணீல மேகங்கள் குதிர் குதிராய் அணி செய்கின்றன -
ஏரிப் பரப்புகளில் ஜோதி நடனங்கள் !
மரங்களில் எல்லாம் பச்சைத் தீபங்கள் அடர் சுடர் தெறிக்கின்றன ;
வானம் எவ்வளவு பரந்து விரிந்து பூமியை அணி செய்கிறது !
ஒவ்வொரு இல்லை முகத்திலும் சூரியப் புன்னகை -
எங்கும் வசீகரம் ! எதிலும் திமிரும் வனப்பு !
&
சந்தியா வேளையில் ' வெள்ளி '.. நெருப்புக் கொழுந்தாய் ....
மேலை வானில் உயர்ந்து இரவு ஏழரை மணி அளவில் அணைகிறது -
அஸ்தமனங்களை அழகு செய்யும் கரிய நேரிய பனஞ்சோலைகள்-
அந்த இடையனின் வாழ்வு எவ்வளவு இனிதாய் இருக்க வேண்டும் !
மனம் தளராத புற்பூண்டுகள் எங்கெங்கெல்லாம் முடியுமோ
அங்கெங்கெல்லாம் வளர்ந்து அழகைக் கொழிக்கின்றன --
அடை அடையாய்ப் பசுமை வண்ணமே !நீ வாடிப் போவாயே !
என்று எண்ணுகையிலேயே மனம் புண்ணாகிறது --
&
இறைவா !
பரந்த வானிலே பறக்க இறக்கைகள் தாயேன் !
&
இவர்களால் எப்படி ஆண்டு முழுவதும் கட்டிடங்களுக்கிடையில்
சிக்கி வாழ முடிகிறது ?
கட்டிடம் தேவை..ஆனால் கட்டிடப் பொறிகளில் மாட்டிக்கொண்டு
எப்படி வாழக் கூடும் ?
இவர்கள் சிறைப் பறவைகள் -
மரங்களைப் பாராது அதனில் தோயும் காற்றைச் சுவையாது--
சீ !காக்கை ஒன்றை மட்டுமே பார்த்துப் பழகியவர்கள் -
மரச் சூழலற்ற வீட்டை என்னால் ஏற்கவே முடியாது;
சூரியனையே பார்க்காத மனிதர்கள் ...
இவர்கள் நக்ஷத்திரங்களையா பார்க்கப் போகிறார்கள் ?
இவர்கள் வானத்தில் மனை போட்டுத் தலைகீழாக வாழ்பவர்கள் அல்லவா..!
&
சந்திர கலாதர்
[20.11.1987 வெள்ளி காலை பஸ்ஸில் ]

--

No comments:

Post a Comment