Thursday, August 25, 2011

IN A TEMPLE SANCTUM SANCTORUM

உன் கோயில் கருவறை முன் ..!
&
இறைவா ..! இறைவியே ..!
கடவுளே என்பதைவிட தாயே தந்தையே எனத்
துணையாய் அழைப்பதில் நிம்மதியே தனி ---
தனித் தனியே ஏக்கங்களை ஏற்றபடி புலம்பி
விழி ஏரிகளை உடைத்து விடுவதில் ஓர் நிறைவு --
என் இல்லத்தில் சிறு பிறையில் தனிமைச் சந்திப்புகளை விட
கோயிலில் நின்ற திருக்கோலத்தில் கற்பூர தீபாராதனைகளில்
நெஞ்சு நெகிழ இரு கை பரப்பிப் பரவசமாய்ப்
பலரிடையும் என்னில் என்னுள் ஒன்றி நிற்பதில் சுகம் ---
நீங்கள் எட்டவே கருவறை இருளில்
கறுப்பாய்க் காலங்காலமாக கால்வலிக்க நின்றாலும் --
என் குறைநிறை கண்களின் பார்வை வீச்சில்
மெழுகி வைத்த ஒரு பாறைத் துண்டு எனவே தோன்றிடினும் --
இறை அருளோர் உன் அழகை அங்கம் அங்கமாய்த்
தம் பாமாலைகளில் தொடுத்து பரவசப் பட்டிருப்பினும் --
ஒன்றை நினைந்து நினைந்து நான் திகைத்துப் போகிறேன் --
உங்கள் எட்டாத பாதங்களை இங்கிருந்து எட்டி எட்டித் தொட்டிட
என் முந்தையோர் எத்தனை தலைமுறைகள் நிலம் வீழ்ந்து இருப்பர்--
தம் நெஞ்சில் தூசித் துளிகளை பிரசாதமாய் ஏற்று இருப்பர் !
பாத அரவிந்தங்களில் நம்பிக்கைகளை நட்டு இருப்பர்--
எத்தனை ராஜ கர்வங்கள் தலை தாழ்ந்து பணிந்து இருக்கும் !
எத்தனை பாபங்கள் பரிகாரம் தொழுதிருக்கும் !
உங்கள் முன் எத்தனை சரித்திரங்கள் திறந்து மூடியிருக்கும் !
எத்தனை இளமைகள் முதுமைக் கூன் பெற்று மடிந்து இருக்கும் --
ஆம் ..அமைதியாய் அனைத்திற்கும் நிலைக்களனாய்
எதனையும் எடுத்துரைக்காத ஓர் மர்மப் புன்னகையாய் --
இன்னும் பன்னூறு ஆண்டுகள் அழிவிலாது இப்படியே
எம் முன் அழிவுகளை ஆக்கங்களை அசையாத பார்வையோடு
நம்பிக்கை ஊற்றாய் நின்று இருப்போம் எனும் மொழி கேட்கிறது --
இந்தச் சிந்தனையில் என் குறை மறந்தும் நிம்மதியாய் வழி நடந்தேன்
-------சந்திர கலாதர்

DURING A NIGHT WHEN IT HEAVILY RAINED

[ஒரு பலத்த மழை அனுபவங்கள் உரைநடையாய் ]
நேற்று இரவு இந்த வலிமையான மழை என்னைத் தன் சுழலுள் மிகச் சிக்க வைத்துக் கொண்டது .--
அடர் மழையை ,மின்னல் வலிய சிறகுகளை, வெடிபடும் இடிகளை நுணுக்கமாகத் தியானித்தபடி இருந்தேன்--
வீட்டின் பாதுகாப்பில் மழைமின்னல் இடிகளையெல்லாம் பதிவு செய்தேன் --
காரணம் : மழையின் பேச்சு,இடிகளின் மிரட்டல் முனகல்கள் அனைத்திற்கும் மிகச் சரியான எழுத்து வடிவம் சமைக்கவே !
இந்த ஒலிகளையெல்லாம் வடிகட்டி வடிகட்டி செவித்தியானம் செய்தேன்-
இடிகள் தான் எத்தனை எழுத்துக்களில் தம்மை வெளிப்படுத்துகின்றன --கொட கொட கொட டுமு டுமு டுமு டம டம என்று பெரிதாய்
வானமே பொடிபடத் துவங்கி, மெல்ல மெல்ல ஒலியே சிறு பொடிகளாகி ,
சிறு தகர டப்பா போல வான வீ திகளில்உருண்டோடுகின்றன -
மின்னலின் வலிமைக்கு ஏற்றவாறு ஒலிகளின் ஏறு- இறங்கு-தொடர் சங்கிலிப் பிணைப்பு ---இடைவிடாது !
மழையோ பல குரல் மன்னன் --'சோ '..'சர சர'.'தட தட''டொட் டொட்'
என் விவரிப்பு எப்படிப் பண்ணிடினும் அது அந்த ஒலி அமைப்பு பக்கம்கூட நெருங்கவே முடியவில்லை--
எனவே நான் வெற்றி பெரும் வரை பதிவுகளை,மற்றும் இனி வரும் மழை இடிகளைக் கேட்ட வண்ணமேதான் இருப்பேன் !
மின்னல் என்னை எப்போதும் வியப்பில், ஆர்வத்தில் ,கட்டிபோடும் ,இழுத்துச் செல்லும் மகா மாயன் --
வான் பறவைகள் பல வடிவங்களில் சிறிது,பெரிது,மகாப் பெரிது என்றபடி,அழகாய்,ஆவேசமாய், அற்புதமாய்,அச்சமூட்டுபவையாய்
தத்தம் மெலிய, வலிய ஒளிச் சிறகுகள் விடாது படபடத்தபடி ,திக்கு எங்கினும் இறங்கி ,பறந்து.போரிட்டு, வான் வெளியையே வெள்ளிக் கோட்டை ஆக்கி ,மேக முந்தானைகளுள் ஓடி விளையாடி ..இன்னும் என்னவெல்லாம் கூற ..!
நான் மந்திரத்தால் கட்டுண்டு ஊமையாய் நின்றிருந்தேன் .
--------சந்திர கலாதர்

Tuesday, August 23, 2011

YEA...IT IS ONLY A BOX CAMERA ..!

அது ஒரு 'டப்பா' காமிராதான் ...!
&
அது ஒரு 'டப்பா' காமிரா தான் --
ஒரு கிட்டப் பார்வைக் கண்ணாடி
என்றும் கூடச் சொல்லலாமே !
ஆம்.. பழைய காலம்தான்--
அது வாயை மட்டும் திறந்து
வந்து விழுந்ததை விழுங்கும்
குருட்டு மனனம் செய்யும்
பள்ளி மாணவன் போல் !
கூர்ந்தும் நோக்காது-
'பளிச்' என மூளையில்
பதிந்தும் கொள்ளாது --
அதற்கே என்ன ' ஸ்டைல் ' செய்தோம்
ஹாலிவூட் திரைப்படம் எடுப்பது போல் --
உருட்டிப் புரட்டி சிலநாள் எடுத்தபின்னே
கடையில் கழுவக் கொடுத்து
தேர்வு எழுதிய மாணவன்போல்
'திக் திக்' எனத் தவம் கிடந்து பார்க்கையில்
எல்லாமே வெண் அல்லது கறுமேகங்கள்போல் !
எது எது யார் யார் என்றே புரியாது --
தெரிந்தாலோ எல்லாம் புள்ளி மயம் !
ஐம்பது ஆண்டுகள் ஆன படம்---
என்னோடு சேர்ந்து கிழண்ட படம் !
காலம் பசியில் தின்ற படம் -
மஞ்சள் நிறைவாய்க் குளித்த படம் !
அதில் இருப்பவர் சிலர்
உலகில் இல்லாத படம் !
எப்படி இருந்தால் நமக்கென்ன ?
எடுத்து பார்க்கையில் வெடிக்கும் பரவசத்தை
எழுத்தில் குரலில் இயன்றிடுமோ !
புது வெள்ளமாய் புரண்டிடும் நினைவுகள் -
பாசம் தோய்ந்த அப் பார்வைகள் -
அந்நொடியில் உறைந்திட்ட குறுஉரைகள் --
பின் புலமாய்த் திகழ் இயற்கைத் தோற்றங்கள் --
அசட்டுச் சிரிப்புக்கள் .விழி மூடல்கள் எனக்
காலத்தின் ஆழத்தில் நமை அழுத்தி
அந்நறுமணக் குழலை உட்செலுத்தி
இந்நொடிகளை மாலை மயக்கமாக்கிடுமே !
இதயம் பூவாய் மலர்ந்திடுமே !
விழிகளில் கண்ணீர் மொக்கிடுமே !
&
சந்திர கலாதர்

Saturday, August 20, 2011

fructified in silence and merged in your grandeur

மௌனத்தில் கனிந்தேன் .!

&
இளங்காலை நேரம்--
இந்த எளியவனை எதிரில் அமரச் சொல்கிறாய் ;
இமைத் திரை இறக்கச் சொல்கிறாய் -
"தியானி !"-
பணித்தலா ? பனித்தலா இது!
கட்டளையா ?
தென்றலின் தழுவலா ?
மென்மையாய் உன் குரல் ரீங்கரிக்கின்றது -
விழி விசிறிகளை நீயும் இறக்குகிறாய் !
தியான தீபம் உன்னில் சுடர் பூக்கின்றது -
தவழ் தென்றலில் மலர்களின் மாய மணம்
உயிரினை மூழ்கச் செய்கிறது -
காலம் சற்றுத் தவழ்கிறது -
என்னுள் இனம் புரியா ஒரு படபடப்பு ;
இமைகள் சிறகு விரிக்கின்றன !
என் விழிகளின் முன் உன் பேரழகு !
நிலவென வருடும் அமைதி -
கூசாத அலையாத ஒளி விரிவுகள் -
குழந்தையாய் உறங்கும் தியானம் !
உளமார ரசிக்கிறேன் -
கால மொட்டு எப்பொழுது கனியாயிற்று ?
தியானம் விழிக்கிறது -
"என்ன உண்மை கனிந்தது?" -வினவுகிறாய் -
உன் கேள்வி எனை மெல்ல வளைக்கிறது ;
என்ன சொல்வேன் ?
நாலாபுறமும் ஒரு நொடி
விடையைத் தேடி விழி பறக்கிறது !
மறுநொடி...
"மௌனத்தில் கனிந்தேன் ;
பேரழகில் கலந்தேன் !"
உன் முத்துச் சிரிப்பொலி
செவிகளிலே கலகலக்கிறது !
&
சந்திர கலாதர்

Friday, August 19, 2011

WHY EMPTY MY LIPS .?

ஏன் உதடுகளை வெறுமையாக்குகிறாய் ?
&
பச்சிளம் காலையிலும்
பழுத்த மாலையிலும்
உன்னைச் சந்தித்து அளவளாவ
கட்டுக் கடங்காப் பேராவலில்
பரபரப்பதைக் கண்ணுறும் இவர்கள்
" ஏ ! மூடா !
அவனைக் கண்டனையா ?
எங்கு எப்படி இருக்கிறான் ?"என
வினாச் சரங்களால் காயப்படுத்துகின்றனர் --
ஏளனங்களால் என்னைக்
கொத்தி எடுக்கின்றனர் -
&
தலைவனே !
தினமும் தவறாது சந்திக்கிறேன் அல்லவா?
மனமார உரையாடுகிறேன் இல்லையா ?
மகிழ்வில் திளைத்து ஆடுகிறேன் அல்லவா?
பின் ஏன் அந்த வினாக்கள்
என் தலையை
மண் பார்க்க மடித்து விடுகின்றன ?
அவ்வேளைகளில் ஏன்
என் வார்த்தைகளைப் பறித்து
உதடுகளை வெறுமையாக்கி விடுகிறாய் ?
&
சந்திர கலாதர்

INSIDE ME IS THE FESTIVAL OF LAMPS

என்னுள் இப்போது கார்த்திகைத் திருநாள் !
&
புகழ்க் கீதங்களில் கட்டிப் போட்டு விடலாம் என
நாளெல்லாம் பாடுகிறேன் ..
ரிஷிகள் மகாகவிகள் படைப்புகளை எல்லாம்
வேகாத நிவேதனமாய் உனக்குப் படைக்கிறேன்---
நீயோ --
என் புகழ் வலை நழுவி
மீனாய் நகைக்கிறாய் --
பேராசைகள் தோற்கின்றன ;
துன்பத்தில் சரிகிறேன் --
கண்ணில் துளிர்த்து
மண்ணிற் சிதறிய
கண்ணீர்த் துளிகளில்
நீ --
கைகொட்டிச் சிரிக்கிறாய் !
"அம்மா..!" என்கிறேன்
"அது போதும் !"என்கிறாய் -
தலை குனிகிறேன் --
"எது முடிகிறதோ..
அதிலே நிறைவேன் " என்கிறாய் -
ஆம்..
என்னுள் இப்போது
கார்த்திகைத் திருநாள் !
&
சந்திர கலாதர் ..

AUTUMN SEASON --A VIEW POINT

இலையுதிர் காலம்--ஓர் பார்வை
&
இலை உதிர் காலம்
தலை தூக்கி விடுகின்றது --
உறவுகள் இற்று அழிகின்றன ;
பந்தங்கள் பட்டுப் போகின்றன --
மரணமோ மகிழ்ச்சியாய்க்
குட்டிகரணம் போடுகிறது -
கண்கள் சொட்டுக்களாய்க் கரைகின்றன--
நினைவுகள் நலிகின்றன -
காதல் விம்முகிறது -
விதி சிரிக்கிறது ;
அனுபவம் கனிகிறது -
அறிவு தெளிகிறது -
துக்கம் நிர்வாணமாய்த் திரிகிறது ..!
&
சந்திர கலாதர்

IN THE TEMPLE OF MORNING...

காலைக் கோயிலின் மேகக் குடைகள் !
&
காலைக் கோயிலில்
மேகக் குடைகள் அழகாய் --
தென்னை விசிறிகளைக்
காற்று நேர்த்தியாய் அசைக்கிறது --
'காக ' பக்தர்களின்
'ஆ,கா..கா.' பிரவாகங்கள் !
குயிலின்..கரிச்சான்களின்
கொஞ்சு குழல் வாசிப்புகள் --
இந்த மங்கள முகூர்த்த வேளையில்
சூரிய தேவன் கிழக்கில்
சுடர் பொன் பறவைகளைப்
பறக்கவிட்டுப் புன்னகைத்தான் !
&
சந்திர கலாதர்

WHY PLAYFUL BOATS IN MY MISERIES ?

வேதனைகளில் வேடிக்கைப் படகுகள் ஏன் ?
&
ஏழ்மை விலங்கிடப்பட்டு
வெறுமை இருளோடு பிணைக்கப்பட்டிருக்கிறேன்--
உன் திருமேனி நீராட்ட வேண்டும் ;
சிங்காரித்து அழகு பார்க்கப்பட வேண்டும் என்ற ஆவல்
புதிதாய்ச் சிறகு முளைத்த சிறு பறவையாய்க்
கட்டுக்கடங்காது படபடக்கிறது --
ஆனால் ..சிறு குவளையும் என் வசம் இல்லை ;
விரல் குவிப்பிடையும் பெரும் ஒழுகல்கள் -
என் செய்வேன் /
என்னுள் பார்க்கிறேன் -
நெஞ்சிலே பாசப் பளிங்கோடை ;
விழிச் சிறு கலயங்களில் விளிம்பு ததும்ப
முகர்ந்து வருகிறேன் ;
ஆசை பொங்க நீராட்டுகிறேன் இரு விழிகளால் --
அது முத்துக்களாய் உன் மேனி பூத்துச் சிரிக்கின்றன !
கள்ளம் இன்றி நீ கலகலக்கிறாய்--
ஆம்..
வேதனை நதிகளில் வேடிக்கைப் படகுகள் ஓட்டி மகிழ்வதில்
உனக்கு ஏன் இந்தத் தணியாத ஆசை ?
என் வறுமைகளில் நிறைவையும்
ஏழ்மையில் சுகத்தையும்
எங்கே ஒளித்திருந்தாய் ?
&
சந்திர கலாதர்

Thursday, August 18, 2011

MY BEAUTIFUL TRAIN

அழகிய ரயிலே
&
குழந்தாய் ! இது --
ஆயிரம் கால்களின் நடனம்
அவசர ஆனந்த நடனம்
இரு கோடுகள் மீதான நடனம்
இடை ஆட்டிட வைக்கும் நடனம்
&
மேளங்கள் தாளங்கள் கொட்டும்
சலங்கை ஒலிகள் மிகக் கொஞ்சும்
ராகங்கள் ஏறி இறங்கித் திரியும்
பாடல்கள் பலவிதம் மாறும்
சோகம் வீழ்ந்தது போலும்
குரல் விசும்பி மிகத் தவிக்கும்
அனைவரும் உறங்கி விழினும்
இசை ஊற்றில் இதயம் ஆடும் .
&
இரவில் ஒற்றைக் கண் திறந்தே
மை இருளில் நீந்திப் போகும்
ஒரு ஊரை நெருங்கி விட்டால்
"ஊ"வெனக் "கூ"வெனக் கத்தும்
பெருமூச்செறிந்து கொண்டே
வயிற்று சுமைதனை வெளித் தள்ளும்
உடன் மிகுந்த பசி கொண்டே
ஒரு கூட்டத்தையே வாயுள் விழுங்கும் !
&
ஒற்றுமைச் சின்னமாய்க் கைகோர்த்தே
ஒன்றன் பின் ஒன்றாய் ஓடும்
திகட்டா உன் அழகே அழகு !
எத்தனை ஊர்திகள் இனி வரினும்
நெடிய உன்போல் அழகுண்டோ !
&
--சந்திர கலாதர்

Wednesday, August 17, 2011

WHY ARE THEY SO DIRTY..?

அவர்கள் ஏன்.ஏன்..?
&
அவர்கள் ...!
அழுக்காக இருக்கிறார்கள் --
ஆம் -
வேறு எப்படி இருக்க முடியும் ?
நம் அழுக்குகளையும் அல்லவா
அவர்கள் பூசிக் கொண்டு உள்ளார்கள் !
&
அவர்கள் ஏன் எப்போதும்
கூச்சலும் பூசலுமாய் ..?
ஆம் -
நம்மைப் போன்று
மௌன முகங்களிலே
வெறுப்பை பட்டை தீட்டச்
சற்றும் அறியாததால் ...!
&
அவர்கள் ஏன்
படிக்காது பாழாகிறார்கள்..?
ஆம் --
அவர்கள் எதிர் காலங்களையே
நாம் திருடிச் சென்று விட்டதால் ..!
&
அவர்கள் ஏன்
குடித்தே அழிகிறார்கள்..?
ஆம் --
வானங்களில் மயக்கங்களிலாவது
வளைய வருவதற்காக..!
&
---சந்திர கலாதர்

NATURE THROUGH MY EYES

என் விழிவழி இயற்கை
&
ஐப்பசி மழை ஓய்ந்து பத்து நாட்களாகி விட்டன ...
உலகம் எவ்வளவு பசுமையாய் விரிந்திருக்கிறது !
வானில் சூரிய ராகங்கள் இழைகின்றன ;
வெண்ணீல மேகங்கள் குதிர் குதிராய் அணி செய்கின்றன -
ஏரிப் பரப்புகளில் ஜோதி நடனங்கள் !
மரங்களில் எல்லாம் பச்சைத் தீபங்கள் அடர் சுடர் தெறிக்கின்றன ;
வானம் எவ்வளவு பரந்து விரிந்து பூமியை அணி செய்கிறது !
ஒவ்வொரு இல்லை முகத்திலும் சூரியப் புன்னகை -
எங்கும் வசீகரம் ! எதிலும் திமிரும் வனப்பு !
&
சந்தியா வேளையில் ' வெள்ளி '.. நெருப்புக் கொழுந்தாய் ....
மேலை வானில் உயர்ந்து இரவு ஏழரை மணி அளவில் அணைகிறது -
அஸ்தமனங்களை அழகு செய்யும் கரிய நேரிய பனஞ்சோலைகள்-
அந்த இடையனின் வாழ்வு எவ்வளவு இனிதாய் இருக்க வேண்டும் !
மனம் தளராத புற்பூண்டுகள் எங்கெங்கெல்லாம் முடியுமோ
அங்கெங்கெல்லாம் வளர்ந்து அழகைக் கொழிக்கின்றன --
அடை அடையாய்ப் பசுமை வண்ணமே !நீ வாடிப் போவாயே !
என்று எண்ணுகையிலேயே மனம் புண்ணாகிறது --
&
இறைவா !
பரந்த வானிலே பறக்க இறக்கைகள் தாயேன் !
&
இவர்களால் எப்படி ஆண்டு முழுவதும் கட்டிடங்களுக்கிடையில்
சிக்கி வாழ முடிகிறது ?
கட்டிடம் தேவை..ஆனால் கட்டிடப் பொறிகளில் மாட்டிக்கொண்டு
எப்படி வாழக் கூடும் ?
இவர்கள் சிறைப் பறவைகள் -
மரங்களைப் பாராது அதனில் தோயும் காற்றைச் சுவையாது--
சீ !காக்கை ஒன்றை மட்டுமே பார்த்துப் பழகியவர்கள் -
மரச் சூழலற்ற வீட்டை என்னால் ஏற்கவே முடியாது;
சூரியனையே பார்க்காத மனிதர்கள் ...
இவர்கள் நக்ஷத்திரங்களையா பார்க்கப் போகிறார்கள் ?
இவர்கள் வானத்தில் மனை போட்டுத் தலைகீழாக வாழ்பவர்கள் அல்லவா..!
&
சந்திர கலாதர்
[20.11.1987 வெள்ளி காலை பஸ்ஸில் ]

--

when imagination is on a dreamy flight..

கற்பனை பறக்கையில் ...!
&
கச்சையாய்க் கட்டியது
கந்தலோ கிழிசலோ
கற்பனைப் பறவை
பொன்சிறகு பரப்பித்
தொடுவான் மிதக்கையில்
பசி என்ன ? அட !
வறுமைதான் என்ன ?
&
சந்திர கலாதர்
--

Tuesday, August 16, 2011

MOON THAT EVER FLOORS ME..!

நிலவே...நீ !
&
நிலவே--
வற்றாத கற்பனை வடிவே !
கூடி வரும் மேகங்கள்
ஓடி வந்து முத்தமிட்டு
நாடித் தழுவி நகருதே
நெஞ்சின்றி மிக மெதுவாய் --
கோடிக் கற்பனைகள் அவிழ்த்தனை ;
கோடிகள் பல இன்னும் படைப்பாய்-
செல்லும் வழி எல்லாம்
அழகை ஆடவிட்டாய் --
இரவின் காமத் தொப்புள் நீ !
மொட்டை மாடியில்
மௌன வீதிகளில்
வெள்ளமுதைக் கசிந்து
மெல்லப் பெருக விட்டாய் -
கூர் கத்தி கொண்டு
நெஞ்சுள் நுழைந்திடினும்
நெஞ்சில் சுவடும் இல்லை ;
செங்காயங்கள் ஏதும் இல்லை --
இரவின் தனிமையில்
இதயச் சிறகால் வருடியே
இமைகள் மயக்குகிறாய்
இன்பப் போதை ஏற்றுகிறாய் !
&
----சந்திர கலாதர்

Monday, August 15, 2011

UNABLE TO PREDICT THE WAYS OF THE WORLD

எதையும் கணிக்கத்தான் முடியவில்லை
&
சிறு வயதில் சிறு பொறியாய் சிறு மனதில் சில எண்ணங்கள்
ஆண்டுகள் பற்பல அணைந்து போயிடினும் அணையாமல்
நெடியதோர் கர்ப்பமாய் என்னுள்ளே விடாப்பிடியாய் வளர்ந்து
விதி குறித்த ஓர் நாளில் முழு வடிவில் விழித்து எழுந்து வீழ
என் ரத்தமும் சதையுமாய் எனையே அழுத்திக் குறுக்கியதாய்
ஹரிச்சந்திர வாக்குடன் எழில் ஏந்தும் மேனியாய் என் பெருமிதமாய் --
பார்வைகள் பல பட்டுப் பாராட்டைப் பெருக்கி வரும் என எண்ணுகையில்
சுவடுகளே இன்றி இவை சுருண்டு ஏக்கத்தில் எனை வீழ்த்தும் ;
வெறுமை எனைச் சுற்றும் தோல்வி கை தட்டிக் கொக்கரிக்கும் --
&
இதற்கிடையில் கொசுக்களின் கருத்தரிப்பாய் பல நூறு கற்பனைகள்
அனுதினமும் ஆங்காங்கே கொத்துக் கொத்தாய் பொரிபடவும்--
என் வியப்பாய் இவை எல்லாம் வெற்றி வாகை சூடி வரும் --
எதையுமே இவ்வுலகில் என்னால் கணிக்கத்தான் முடியவில்லை !
&
------சந்திர கலாதர்

Sunday, August 14, 2011

HOW TO ERASE ?

HOW TO ERASE ?
&
IS TOTAL ERASURE POSSIBLE ?
WHEN THE BODY IS INCINERATED
THE ASH REMAINS-
HOW THEN TO ERADICATE THE ASH ?
INCIDENTS DIE
BUT THE MEMORIES STICK ON--
HOW THEN TO ERASE THE MEMORIES ?
&
WHEN GOOD THINGS WANE
AS THE FOOTPRINTS OF THE BREEZE
THE PRESSURE OF VIOLENT THOUGHTS
AS CHISELLED PRINTS ON ROCK
REMAIN INDELIBLE IN THE RECESSES OF MEMORY--
IN THE DARKNESS OF THE NIGHT
AND DEEP IN THE NEST OF THE IRIS
MEMORIES GLOW IN RED HOT FLAMES--
HOW THEN TO ERASE MEMORIES?
&
S.CHANDRA KALAADHAR

HOW TO DESTROY ?

எப்படி அழிப்பது ?
HOW TO DESTROY ?
&
அழிப்பது முடியுமா ?
உடலை எரித்தால் சாம்பல் -
சாம்பலை எப்படி அழிப்பது ?
நிகழ்ச்சிகள் செத்த பின்
நினைவுகள்--
நினைவுகளை எப்படி அழிப்பது ?
&
தென்றலின் சுவடாய்
நல்லவை நலிய
வன்மத்தின் அழுத்தங்கள்
கற் செதுக்காய் நினைவில் --
இரவின் இருட்டிலும்
கருவிழியின் கூட்டிலும்
செங்கொழுந்தாய் நினைவுகள்--
நினைவுகளை எப்படி அழிப்பது ?
&
------சந்திர கலாதர்

NOT FORTUNATE ENOUGH YOUR FOOT TO LAND ON US

உன் பாதம்பட புண்ணியம் பண்ணலியே,அம்மா !
&
அம்மா !
இன்னமும் கொஞ்சம் இறந்த காலத்துக்குள்ள விழிச்சுப் பாக்கறேன் ...சுகமாத்தான் இருக்கு ...கொழந்தையா ..சின்னப் பையனா ...கொழல் டிராயர் போட்டுண்டு ..ஒன்னைச் சுத்திச் சத்தி வந்துண்டிருந்தேனே ..பொடவைத் தலைப்ப விடாமப் பிடிச்சிண்டு ..அப்பல்லாம் எப்பவாவது என்னைக் கடிஞ்சிண்டு இருக்கியான்னு பாக்கறேன் .
நெனப்புக் கூடத்தில ' ஞாபக ஒளி ' அடிச்சு இருட்டு மூலை மூலையாய்த் துருவித் தேடிப் பாக்கறேன் ..ஆனா அப்படி உக்ர சிற்பம்
ஒண்ணுகூடக் கண்ணுல இடற மாட்டேங்கறதே !
எப்படிம்மா ஒன்னால அடிக்காம எங்களை எல்லாம் ஆண்டாண்டா வளர்க்க முடிஞ்சுது ?
நாங்க ஒன்னும் கட்டிக் சமத்து இல்லையே ..அம்மா சொன்னதும் மௌனமா கையைக் காலைக் கட்டிண்டு ஒக்கார ...அடம் ,சண்டை ,குஸ்தி ,பிராண்டல் ,பிடுங்கல் ,ஓலம் , ஊளை எல்லாந்தான் உண்டே !
இருந்தாலும்கூட நீ முதுகில வெடிச்ச மாதிரி .காது மடலைக் கிழிச்ச மாதிரி ..கன்னத்துல கைய விட்டுட்டுப் போன மாதிரி ..ம்ஹூம்
ஒன்னுமே இல்ல .
ஒன்னே ஒண்ணுதான் ஞாபகத்துல இடறுது .." மிதிக்கட்டுமா ..மிதிக்கட்டுமா ! "ன்னு கொஞ்சம் கோபமா காலை எங்க தொடைக்குமேல உயர்த்துவ ..ஆனால் ஒன் பாதம் பட நாங்க புண்ணியம் எதுவும் பண்ணலியே !
&
சந்திர கலாதர்

Saturday, August 13, 2011

dumb joys

ஒன்றா இரண்டா ஊமை சந்தோஷங்கள் !
&
எல்லாமே நல்லபடியாய்த்தான் சென்றது
குடும்ப ரயில் எல்லோரோடும்
தண்டவாளத்தில் நன்றாகத் தான் ஓடியது;
வழிகாட்டி விளக்கு சுணங்கிப் போனதா இடையில் ?
எதிர் வண்டியோடு மோதித் தடம் புரண்டது ;
எனதின் ஒரு பகுதி எதிர் வண்டிக்குள் புகுகிறது-
என் பகுதி காயங்களுடன் மறு பாதைக்குள் நுழைகிறது
ரணங்களுடன் இரு வேறு பாதைகளில் பயணிக்கின்றன -
சந்திக்க இனி வாய்ப்புக்கள் எந்த நிலையத்திலோ என்றோ ?
வாழ்க்கை எதையும் ஜீரனிக்கப் பார்க்கிறது--
முடிகிறதா ? வழுக்குகிறதா ?வதை செய்கிறதா ?
&
கடந்ததின் பதிப்புகள் நிழற்படங்களாய்
என் முன் இறைந்து கிடக்கிறது --
விடை கொடுத்தாயிற்றே இன்னும் ஏன் இந்தக் கரிசனை ?
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கதை பின்புலமாய்--
ஒவ்வொரு உறைந்த நொடியிலும்
பதிப்பின் உணர்வு நதிகள் நினைவு புரண்டு தாக்குகின்றன --
" இதை ஒதுக்காதே ; இது தனித்தது ;உன்னோடு ஒன்றியது !" எனப்
பொல்லா மனம் புலம்பித் தவிக்கிறது --
அவன் அல்லது அவள் பொக்கை வாயாய்,பொன் சிரிப்பாய் ,
மழலை நதியாய், துள்ளு அணிலாய் , சிட்டுக் குருவியாய் ,
விளையாட்டுப் பம்பரமாய் ,வீம்பாய்,அழுகையாய் ,
அடமாய் , அடங்காப் பிடாரியாய் ,நாளொரு மேனியாய் ,
கொள்ளைப் பேச்சாய் , பள்ளிப் பாலகனாய் ,
ஆடை வனத் தேவனாய் ,அழகு மலராய் ,
கல்லூரித் தோழருடன் சுற்றுலா விடுதலையாய் ,
தோளையும் மீறிய வளரச்சியாய்,மீறிய பேச்சாய் ,
மணமேடை நாயகனாய் ,பின் மனமேடை அகன்றவனாய் --
ஓ..! எத்தனை அவதாரங்களாய் ?
மனம் ஒப்பவே இல்லையே !
வண்ணப் படங்களை மங்கியே போயினும் -
நினைவுகள்தான் மனப் பாறையில் கீறிப்போயினவே-
கணினியில் வன்பொருள் தகட்டில் அலசி ஏற்றுகிறேன் --
எனக்குத் தொடர்புண்டோ சற்றும் இல்லையோ --
அவனு[ளு ]க்கு உண்டாயின் அதுவே போதும்;
அவனே அதில் இல்லாது போயினும்
அவன் கை காமிரா அந்நேரம் ஏந்தி நுழைத்திருக்கும் ;
அது அல்லது அந்நண்பர்கள் அவனின் மகிழ்வு நாதங்கள் ;
அவன் கும்மாளத்தில் சிரிப்பில் எத்தனை சுவைகளோ ?
அவன் சிரிப்பில் என் இறைவனை அன்றோ
இம்முதுமையிலும் மனம் கண்டு கொள்கிறது --
வாலிபம் இதை இன்று கவனம் கொள்ளாது ;
பின் அசைபோடும் ஓய்வில்
நினைவு இனிப்பில் நனையும் ; முகம் மெல்லப் பூக்கும்--
அன்று ஓர் நொடி எனை நினைத்தாலும்
அதிலே ஆயிரம் சந்தோஷம் தானே !
ஒன்றா இரண்டா வாழ்க்கையில்
இந்த ஊமை சந்தோஷங்கள் !
&
------சந்திர கலாதர்

a poem by rabindranath tagore

BIRD,
பறவையே !
why do you forget your song sometimes ?
சில நேரங்களில் உனது பாடலை
ஏன் மறக்கிறாய் ?
why not sing on ?
பாடினால் என்ன ?
don't you know
how futile is a songless morning ?
இசையிலா புலர்காலை எத்தனை வீண் என்பதை
நீ அறிகிலையோ ?
the first fingers of dawn
trembling on tree leaves--
this is your song.
மலர் காலை தன் முதல் விரல்களால்
இலைத் தந்திகளில் மீட்டுகிறதே
அது உனது இசைதானே --
don't you know
you are the loved one of the morning ?
காலையின் அன்புச் சின்னம் நீயே என்பதும்
நீ அறியாயோ ?
the ' lakshmi ' of dawn
who offers gold to me on waking--
நான் விழிக்கையில் பொன்னை எனக்குப் பரிசாக்குவது
இளங்காலை எனும் ' திருமகள் ' அல்லவா ?
don't you know
it's time to offer her your song ?
இது நேரமே உன் கீதங்களை
அவளுக்குப் படைக்கும் தருணமல்லவா ?
இது நீ அறியாததா ?
after the dreams of a night of sorrow
comes the magic of your morning raga--
ஒரு துன்ப இரவின் கனவுகளின் பின்
உனது காலை இசையின் மாயம் தொடர்கிறது --
don't you know this is the song of new life ?
இதுவே புது வாழ்வின் பாடல் என்பது
நீ அறிகிலையோ ?
--rabindranath tagore.
[ மொழி மாற்றம் ...சந்திர கலாதர் ]

Friday, August 12, 2011

creation has taught me a lesson .

creation taught me a lesson.
&
nature photography has taught me a philosophy
of mountainous proportions in a language of silence--
if you deeply desire to merge into nature's grandeur
you must reduce yourself to a dot and featureless even ,
and the glory and the inaccessible peace would be yours--
but if you cannot escape your centripetal urge from yourself ,
you alone would be there in full bloom
and not the immensity and the intricacy of creation !
&
s.chandra kalaadhar

Wednesday, August 10, 2011

EARLY DAWN

உஷத் காலை
[ EARLY DAWN ]
&
வெள்ளை முகிற் பறவையினம் வெண்ணிலவை அணைத்திருக்க -
கள்ளமொழித் தாரகைகள் கண் விழித்துப் பார்த்திருக்க --
கீழ்த் திசையில் வெள்ளை ஒளி நீலவானைத் தொட்டெழுப்ப --
மெல்லவரும் குளிர் காற்று கிசுகிசுத்துத் தடவிடவே
நிலமகளும் விழித்திட்டாள் மெதுவாகத் தெளிவுற்றாள் !
&
காதல் மேக நெஞ்சத்திலே ஆசையொளி ஊற்றிவிட்டு
காதல் தந்த போதையிலே காவியங்கள் கண்ணியற்ற
முயங்கிவிட்ட பெண் நிலவும் வெட்கம் மிகப் பொங்கிவர --
மயங்கிவிட்ட ஆண்முகிலின் அன்புக் கர அணைப்பினின்று
விடுபட்டு உடன் விலகி நின்று வெள்ளை ஒளி வதனமதை
மஞ்சள் வெட்கத் திரை போர்த்தாள் மௌனத்தில் மிக நலிந்தாள் !
&
மேலைத்திசை மூலையிலே நேற்று மாலைக் கதிர் இறங்கக்
கனிவுமிகப் பறந்தவாறு மேற்திசையிற் கூடிநின்று
வழியனுப்பி விடைபெற்ற அச்சிறு பறவைக் கூட்டம்
இன்று வெள்ளை ஒளி வான் தழுவி ஒண்கதிரோன் வரவுசொல
கீழ்த்திசை கூடகன்று காற்றில் ஏறிக் கரம் பரப்பிக்
காலைத்தேவன் கதிர் அரசைக் கோலமிகு இன்குரலாலே
வாழ்த்துப் பாடி வரவு வேண்ட வான் நிறையப் பறந்து சென்று
வயல்வெளி நிறைக்குது பார் இதயம் இறக்கை காணுது பார் !
&
-------சந்திர கலாதர்

MOM ! HOW YOU ALONE.....?

அம்மா உனக்கு மட்டும் எப்படி....?
[ இறுதிப் பகுதி ]
&
உதவாக்கரை என்றெனை விளித்து இடிப்பார் --
கோடை மழையின் படு தீவிரத்தோடு திடும் எனக்
கடும் வசவுகள் கொண்டு நையப் புடைக்கிறார்--
நச்சு நாவுகள் நெஞ்சில் அறைவதும்
ருத்ர விழிகள் சினந்து குவிந்து சுட்டு எரிப்பதும்
இரக்கமற்ற முகக் குறியீடுகள் வெட்டி
விரட்டி அடிப்பதும் தாங்குதற் கிலையே--
அம்மா !
இவர்கள் கோப மின்னல்கள் கண்களைப் பறிப்பன !
தனிவழிப் பாதையில் இருள்மிகத் தெளிப்பன !
உடல் தள்ளாடி வீட்டினுள் நுழைகிறேன் -
மரண மௌனமாய் உன்முன் நிற்கிறேன் --
கிழிந்த உயிருள் நைந்த உடலை மறைத்துப் பார்க்கிறேன் --
உலர்ந்துபோன உதட்டு விளக்கினில்
சிறு சிரிப்புச் சுடரினை ஏற்றிப் பார்க்க வீணே முயல்கிறேன் --
தப்பிப் பீறிடும் பெருமூச்சுக் கற்றைகள்
போரிடும் சுடர்களை விழுங்கி விடுவன --
ஆனால் மடியும் மாலையின் மயங்கும் ஒளியில்
தனித்த வீட்டில் ஏகாந்த ரூபியாய் அன்புத் தாயே !
கீழ்வருவன பகர்ந்து வியக்க வைக்கிறாய் !
" பொன் கனவுகளின் பெரும் பேரரசே !
உலக நெஞ்சங்களின் அன்புத் தலைவனே !
என் வாழ்த்துக் கூரையின் குளிர்நிழல் விரிப்பில்
தாயன்புச் சுடர் அரியணை அமர்வாய் --
நிலவுப் பார்வையை நோய் மனங்களில்
மென்மையாய்ச் சொரிவாய் இனிமையைப் பொழிவாய் --
நறுமணத் தென்றல் மலர் வருடல்களால்
நெஞ்சில் எரியும் வேதனைப் புண்களை அன்பாய் ஆற்றுவாய் --
&
அன்புத் தாயே !
இவ்வுலகம் முழுதும் ஆளுவேன் நான் எனும்
அச்சேதி உனக்கு மட்டும் எங்கிருந்து வந்தது ?
நீஎனை உனது வற்றிய கரங்களில் பெருமையாய் உயர்த்தி
உன்னதச் சுடர் அரியணையில் ஆர்வமாய் ஏற்றிட --
சிதிலமான சிறு வீட்டினுள் உருவிலா மணிமுடி ஒன்றை
சுருங்கிய கரங்களில் நடுங்கிடப் பிடித்து
அந்தி மயங்கும் குருட்டு வேளையில்
குருடும் செவிடும் மண்டிய உலகினை
ஆளப் பணித்து முடிசூட்டி மகிழ்கிறாய் -
&
' கனவுகள் பொரிக்கும் வீண் சூனியக்காரன் ! ' என்பதாய்ச்
சேதி எங்கிருந்து அம்மா இவர்களைச் சேர்ந்து
பட்டப் பகலின் கூரிய ஒளியில் தற்காப்பில்லா என்
ஆன்மாவதனை விழிகளால் எற்றியும் உதைத்தும்
சொற்சாட்டை கொண்டு அடித்தும் அறைந்தும் வதை செய்கின்றார் --
பிடரியைப் பிடித்துக் கருணையேயின்றிப் பொல்லா விதி
உலுக்கிய பின்னே பயங்கரன் தோல்வியின் கரங்களில்
விசிறி எறிந்திடப் பேய் உதை ஒன்றைத் தோல்வி தொடுத்திட
வீட்டின் முன்பு இருட் குட்டையுள் குவியலாய் வீழ்கிறேன் --
தட்டுத் தடுமாறி படுக்கையுட் சரிகிறேன்-
விம்மல் நதியினை விழுங்கிட முயல்கிறேன் --
ஆர்ப்பரித்து மோதும் கண்ணீர் அலைகளை
அணையிட்டு அடைத்திட முயன்று தோற்கிறேன் --
என்னுட் புகுந்த பேய்களின் ஊளையும்
கூச்சலும் அரற்றலும் தாங்கவும் கூடுமோ ?
அவநம்பிக்கை நுரைத்திடும் நச்சுக் கோப்பையை
நெடிதாய் முடிவாய் நோக்கி நிற்கிறேன் --
அழகிய கோப்பையின் வசீகர இடையை
உள்ளங்கைளுள் இறுக்கிப் பிடுக்கிறேன்--
என்னிற் புகுந்து என்னையே அழிக்கும் பேய்களை எல்லாம்
ஈர்த்திடும் நஞ்சினை மடக்கெனக் குடித்து மாய்த்திட முனைகிறேன் --
&
அந்நொடி சரியாய் --ஒர்நொடி நழுவலில் நான் மாய்ந்திருப்பேன்--
அழைப்பின் நாதம் அலையாய் அணைக்குது -
" என் மலர்க் கனவின் வண்ணத்துப் பூச்சியே !
இதயக் கடலின் மென்னிசைதன்னில்
தனித்துச் செல்லும் வெண்பாய்த் தோணியே !
இருள் நஞ்சு நிறைக் கீழ்வான் கோப்பையில்
பொங்கும் பூதமேக நுரையுள் இருந்து
எத்தனை அழகாய் எழுகிறான் முழுமதி !
எத்துணை விரைவில் அது வளருது பாராய்
தன் அழகில் ஒளியில் ஒயிலில் மகிழ்வில் !
இதனை உன் இணையிலாக் கற்பனை நனைத்து
என் இதயம் நெகிழ்ந்திட ஓர் கவிதை தாராய் !
என் கானகத் தேவே ! கற்பனைக் குயிலே ! "
&
உள்ளே விரைந்து கோப்பையை உதைக்கிறேன் --
பால் நிலவதனின் மென்மை ஒளியில்
மெழுகுச் சிலையாய் பாச விழிகளின் உருக்கிடும் பார்வையில்
மரண நிசப்தம் போர்த்து நிற்கிறேன் --
தலைதனை நிமிர்த்தி அடர்பார்வை மெல்ல நுழைகிறேன் --
இருண்ட அவநம்பிக்கை மேகப் பொதிகளில்
உதய நம்பிக்கையின் மென்ஒளிக் கீற்றினை
வயோதிக விழிகளின் மங்கிய விரிவில் தெளிவுறக் காண்கிறேன் !
&
----சந்திர கலாதர்

Tuesday, August 9, 2011

MOM ! HOW YOU ALONE...?

அம்மா ! உனக்கு மட்டும் எப்படி...?
[ பகுதி -- 2 ]
[ பகுதி -1 ] [29.07.2011 FB யில் ]
&
அம்மா !
உனது வாழ்வோ குண்டும் குழியுமாய்த் தனிவழிச் சாலை --
துரதிருஷ்டம் விதியெனும் துள்ளிப் பாயும் வலிய குதிரைகள்
உன் காலத் தேரினை இழுத்துச் செல்வன --
வயோதிகத் தேரின் கனத்த கால்கள்
கரிய சோகம் செவ்வேதனை என்னும் புழுதிப் புயல்களை
அடர்ந்தெழ உதைத்துத் துன்ப ராகம் பாடிச் செல்வன--
கட்புலன் மறைக்கும் புழுதிப்புயலுள் அன்புத் தாயே !
மடியும் அந்தியின் மயங்கிடும் மணிகளில்
சிதைந்த வீட்டின் இருண்ட மூலையில்
சுருங்கிய விழிகளின் குறுகிய இடுக்கில் மங்கிய பார்வையால்
எவ்வறிவுச் சுடரின் ஓங்கிய ஒளியை --
வெட்கப் போர்வையுள் கடுகாய்க் குன்றி
சிலை மௌனம் பெருக்கி உன்முன் நிற்கும் என்னிற் கண்டு
என்னுள் உறங்கிடும் கவிஞனை உசுப்பி அகால வேளையில்
பாடப் பணித்து மெய்சிலிர்க்க வைக்கிறாய் ?
&
ஆனால் இவர்களோ இளமை எழுச்சியின் சுடர்மிகு கண்களால்
ஒளிர் காலைப் பொழுதின் வெளிச்ச அலைகளில்
எத்தகு இருளும் சோக மூட்டமும் என்னுட் கண்டு
இரக்கமே இன்றி இதயம் கிழிபட ஓர் குரல் ஓங்கி
" பைத்தியம் ! பைத்தியம் ! " என விரட்டி அடிக்கிறார் ?
&
-----சந்திர கலாதர்

Sunday, August 7, 2011

EMPTY YOUR HEART OF INCONSOLABLE MISERIES

அழுது தீர்த்துவிடு , மனமே !
[ சில சொல்லமுடியாத துன்பங்கள் தலை வெடிக்கச் செய்கையில் ]
&
அழுது தீர்த்துவிடு -
இதயமே !
இப்பொழுதே அனைத்தையும்
அழுது தீர்த்துவிடு .
&
உறக்கப் போர்வையுள் உருளும் புவி -
தேய் பிறை முதற் பருவம் -
குறைப்பட்ட குளிர் நிலவு -
அமைதியான இரவு -
ஓசையின்றி விரையமாகும்
பால் வெண்மைச் ' சாந்தி ' -
இதுவே உன்னதத் தருணம் !
&
சட்டெனவே கிழக்கிருந்து பாய்ந்தேறி
அனைத்தையும் சீறி விழுங்கவரும்
வைகறையின் ஓங்கார வெள்ளத்துள்
சிக்குண்டு மூழ்கி மறைவதற்குள்
அழுது தீர்த்துவிடு ,இதயமே
உடனே அழுது தீர்த்து விடு !
இதுவே உன்னதத் தருணம் !
&
உருக்கிக் கரைத்துவிடு --
நெஞ்சமே !
இப்பொழுதே அனைத்தையும்
உருக்கிக் கரைத்துவிடு --
நொதித்த இதயப் புண்களின் செந்நிற வாய்கள் மீது
கடுங்கொடுமையாய் அழுத்திடும் துன்பக் கோளமதை
ஆத்மாவின் பெருமூச்சில் உன் பாடற் தீநாக்குகளின்
அசுர வெம்மையிலே -
உருக்கிக் கரைத்துவிடு ,நெஞ்சமே
உடனே உருக்கிக் கரைத்துவிடு !
&
விசிறி எறிந்துவிடு -
மனமே !
அனைத்தையும் விசிறி எறிந்துவிடு --
வல்லவன் வாழ்க்கையோடு போராடிக் களைத்தபோது
காவலற்ற மேனியெல்லாம் அவன் கொட்டிக் குவித்துவிட்ட
துயர்ப் புழுதி மலையினை --
&
படபடத்து விரையும் இக்குளிர் காற்று
காலை கதிரவனின் வெஞ்சாட்டையடி தின்று
மலைத்து நிலைத்திடுமுன் நீ கைகையாய்
அள்ளியள்ளித் தூற்றிவிடு -
அனைத்தையுமே மனமே
விசிறித் தூற்றிவிடு !
&
----சந்திர கலாதர்