Sunday, March 11, 2012

அதோ ஒரு மரம் நிற்கிறது -
 
அல்ல ..ஒரு உயிர் அல்லவோ அழைக்கிறது !
 
இலைகளில் இசையாய் அழைக்கிறது
 
செவிடாய்ச் செல்ல முடியாது ;
 
மரத்தோடு மணிகள் மறந்திடுமோ ?
 
என்னால் எளிதில் முடிகிறதே !
 
மரத்தின் மொழிகள் நான் அறிவேன்
 
மரத்திடம் முதலில் எனைக் கொடுப்பேன்
 
முழுதாய்ப் பின் அது தனைக் கொடுக்கும்
 
என்னதான் மரத்துடன் பேசுதற்கு ?
 
ஓ...பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறதே !
 
எத்தனை நிகழ்வுகள் அதன் காலடியில் ,
 
உயர் கண் வீச்சுகளில் ,கால ஓட்டங்களில் !
 
மரத்தடியில் அமர்கின்றேன்
 
அன்பாய் அதனை அணைக்கின்றேன்
 
கிளைகளைக் கருணையில் வருடுகிறேன்
 
பச்சிலைகளில் பாசம் காட்டுகிறேன்
 
மலர்களை உச்சி முகர்கின்றேன்
 
நறுமணம் நெஞ்சில் பரவுகிறேன்
 
நட்பை நலமாய் விரிக்கின்றேன்
 
மண்ணுள் உழன்று வியர்த்திருக்கும்
 
வேர்களுக்கும் அன்பை விசிறுகிறேன்
 
மல்லாந்து அதன் மடி படுத்தபடி
 
தலை அணையாய்க் கை சேர்க்கின்றேன் -
 
மென் காற்றால் எனை மெதுவாக்கி
 
பூஞ்சாரலிலே எனை ஆசித்து
 
நேசமுடன் பழம் கதைகள்
 
நேர்த்தியாய் என்னிடம் பகிர்கிறதே !
 
மனிதரோடு பறவைகளின்
 
காதல் கூடல் பிரிதல் எனும்
 
காதற்காவியங்கள் கணக்குண்டோ !
 
பிரிந்திட எனக்கும் மனமில்லை -
 
பைத்தியம் என நீ நினைத்தால்
 
அதற்கு நான் பொறுப்பில்லை !
 
மரம்தனைப் பார்த்தால் மாறுகிறேன்
 
மறு பிறவி நான் எடுக்கின்றேன் !
 
 
 
 
----சந்திர கலாதர்

No comments:

Post a Comment