Friday, March 9, 2012

அவர்கள் சிறு கிராமத்தில் வாழ்பவர்கள்
 
குண்டும் குழியுமே இணைக்கும் சாலை
 
புழுதியும் புதருமே வரவேற்புத் தோரணங்கள்
 
ஊருக்கே ஒரு கிணறும் ஒரு அடி பம்ப்பும்
 
ஒன்றும் வற்றிப் போனது மற்றது முறிந்து போனது
 
குடம் குடிநீருக்காய் நாளும் நடையாய்த் தொலைவுகள்
 
பள்ளியும் இல்லை மருத்துவ நிலையமோ பல கல் தொலைவில்
 
இவர்கள் எளியவர்கள் இதெல்லாம் குறை என்றே புரியாதவர்கள்
 
எவரிடம் சொல்வது ?எவர் காது தருவார் ?
 
எவர் வந்து பார்ப்பார் ?எதுவுமே தெரியாதவர்கள் -
 
தண்ணீர் இல்லையா? நடந்தே தேய்வார்கள்
 
சாலை இல்லையா? செத்தே மடிவார்கள்
 
ஆனால் எவரிடமும் சொல்லி அறியார்
 
சொன்னால்தான் செய்யத்தான் போவார்களா ?
 
இவர்கள் இருளில் வாழ்பவர்கள்; அநீதி என அழவும் தெரியாதவர்கள்
 
மின்சாரம் வழி தவறி வந்தால்தான் தெரு வெளிச்சம்
 
நமக்கு அவ்வளவுதான் என்று நிறைந்தவர்கள்
 
இக்கிராமம் பெயர் சொல்லி ஜீப்பில் அலையும் அரசினர்
 
இவ்வூருக்குள் நுழைந்ததே கூடக் கிடையாது
 
சாலை போட்டதாய்ச் சொல்லிப் பணம் தின்ற பிணங்கள் உண்டு
 
வெள்ளாடை மருத்துவரை இவர் எங்கே கண்டார் ?
 
பிறந்து விட்டனர் என்பதாலேயே இங்கே வாழ்கின்றனர்
 
முதல் பிற அமைச்சர்களை வெறுங்காலில் பொட்டை வெயிலில்
 
மொட்டைத் தலையினராய் நடக்கவிட்டுப் பார்க்க ஆசை -
 
கிடையில் அடைபட்ட ஆடுகளாய் சிறு கிராமத்தின் மக்கள் அந்தோ !
 
என்று விடியும் இவர்கள் இருட்குடில்கள் ?
 
என்று எரிக்கும் இவர்கள் மௌனம்?
 
 
 
-----சந்திர கலாதர்

No comments:

Post a Comment