ஓர் அந்தியில் என் நெஞ்சு
&
மார்கழி --8; சனிக்கிழமை ;
24.12.2011;
மாலை தேய்ந்து அந்தியின் அழகு -
பாலையாய் நெஞ்சு-
இளம் துளிர்ப்புகள் விழிக்குமா?
மொட்டை மாடி -
பரந்த திறந்த வானம் மௌனமாய் ;
செஞ்சிவப்பாய் அரை சூரியன் அமிழ்தலில் -
ஏதோ ஒரு சிறு சோகம் வானில் -
கையிலே தாகூரின் 'தோட்டக்காரன்'-
என்னுள் கனக்கிறேன் ;
நடக்கிறேன் இங்கும் அங்குமாய்-
நிகழ்வுகளை நெடிதாய் உறிஞ்சுகிறேன் ;
கீழ் வானத்து மேகங்களை
கடைசி நொடிக் கடைக்கண் காதற்பார்வையில்
கன்னம் சிவக்க வைக்கிறான் கள்ளமாய்க் கதிரவன் -
ஒரு புள்ளிபோல் ஜெட் விமானம்
தென் வடலாய் மேலைச் சரிவில்
வெள்ளி இரட்டை வால் குருவிபோல் அழகாய்ச் சறுக்குகிறது-
குளிர் காற்று சருமத்தின் நுண் துளைகள் வழியெல்லாம்
ஒரு 'சில்ல்ல்'ஐஇக் குத்திவிட்டுச் செல்கிறது அவசரம் அவசரமாய் -
மசூதிக் கோபுரத்தின் வழி நெஞ்சையே நெகிழ வைக்கும்
'வழிபாட்டு அழைப்பு ' வானுள் பொங்கி வழிகிறது -
'லா' ' வா' ' ஹூ' என்ற எழுத்தொலிகளுடன்
உடைவதுபோல் ஒட்டுவதாய்-
முடிவதுபோல் நிதானமாய்த் தொடர்வதுவாய்-
தாழ்வதுபோல் சட்டென உயர்வதுவாய் -
ஒரு உருகும் அழுகைக் கேவல் தாங்கி -
விண்ணுள் எழும்பி கடவுளையே சற்று அசைத்துவிடுவதாய் -
நெஞ்சைப் பிழிகிறது-
செவிகளில் பணிவு நிறைக்கிறது-
இமைகளை மூடித் தைக்கின்றது --
மெல்ல இருள் கசிகிறது ;
மேகங்கள் சாம்பல் பூக்கின்றன சோகத்தில் -
கைகள் கூம்புகின்றன -
நிலம் தாழ்ந்து வணங்குகிறேன் -
நெஞ்சில் பறந்து நிறையும் ஓர் மகோன்னத அமைதி -
"இறைவா !இந்த நொடி அமைதிக்கு நன்றி !"
வீட்டினுள் நுழைந்தால் கொசுக்களைவிடக் கவலைகளே சூழும் -
கொசுக்கள் சிறு புள்ளிகளாய் ரத்தம் மட்டும் தேடும் -
கவலைகளோ உயிரையே கேட்கும் -
மாலைகள் என்னை ஏமாற்றியதே இல்லை ;
என் பிச்சைப் பாத்திரத்தில் நிறைவாக என்றும் அருள்பவை ;
அந்தி வேளைகள் என் சிந்தையில் எண்ணிலாத் தாரகை சேர்ப்பவை-
ஓர் அந்தி வேளையே ஓர் நாள் என் அந்தி உயிர்ப்பாகட்டும் !
--சந்திர கலாதர்