சிறு குழந்தையின் வருகை
&
தன் அப்பப்பாவை நாடி
என் மகன்மகன் சிறு பிள்ளை
முதல் முறையாய் மூன்று பிராயத்தில்
மூன்றாண்டுக்குப்பின் படைகொண்டு வந்தான்
ஓர் ஞாயிறில் சிறு ஞாயிறாய் -
வந்த உடனேயே என் மௌனம் பிடுங்கிச்
சுக்கு நூறாய்க் கிழித்து எறிந்தான் -
வலிக்காத வாடாத சொல் அம்புகளைச்
சளைக்காது என் மீது எய்தான் -
கொக்கரிக்கும் அவன் புதுச் சிரிப்பில்
என்னை எங்கோ அள்ளிச் சென்றான் -
கொப்பளிக்கும் அவன் குதலை மொழிக்கெல்லாம்
பிதற்றல் மொழிகள் என்னில் விடாது பிறந்தன --
கேள்விக்கெல்லாம் பட்டெனத்
தெளிவான பதில்கள் பாய்ந்தோடி வந்தன -
என்னை வென்று அடிமையாக்கி
சொற்கோல் கொண்டு குரங்காய்
மணிக்கணக்காய் ஆட்டிப் படைத்தான்-
சிறுவனே ,அயர்வே உனக்கிலையோ ?
நள்ளிரவும் கடந்ததே நா வலிக்கலையோ ?
தொண்டை காயலையோ ? விழி துவளலையோ ?
கொட்டாவி என் வாய் கிழிக்க
'மறுபடி மறுபடி ' எனும் உன் ஆணைகளால்
திரும்பத் திரும்ப ஓர் செயலையே செய்து செய்து
என் கை கால்கள் நோவெடுக்க
செய்வதறியாது ஏமாற்றவும் முடியாது
தவியாய்த் தவிக்கும் என் மீது கருணை காட்டினால் என் ?
கடைசியில் இறங்கி நீ உறங்க ஒப்பினாய்-
கண்ணா மணிவண்ணா இன்றுதான்
இரவு என் நெஞ்சில் சிறகு பறத்தி
நிம்மதியாய் உறங்குவதைத் தெற்றெனக் கண்டேன்
வாழ்க நீ வளர்க நீ என் உயிரே !
-----சந்திர கலாதர்