என் தைலமரமே!
******************
[ஒரு கிணறு;அருகே ஒரு தைலமரம்;மருந்தான மரம்;
கிணற்றின் ஆழத்துள் ஒரு மூலையில் அதன் வேர்ப்பிசிறு தெரிகிறது.
பலன்- கோடரி கடித்தது கணுக்காலை; தடுக்கிறேன் ;தோல்வியடைகிறேன் ;
பிறந்தது இக்கவிதை ]
இது மோகனங்கள் வாழ்ந்த இடம்;
தேனீக்களும் மைனாக்களும் சிட்டுகளும்
தேன் சுவைத்த கலயம் இது!
மேகத்தை மோகித்து காற்றோடு நடமிட்டு
வானுள் கரம் விரித்த தைலமரமே!
அந்தோ! கோடரி விலங்கொன்று
உன் பாதத்தில் கோரைப்பல் பதித்த
கோரத்தை என்னென்பேன் !
வண்ணக் கனவு ஒன்றைக் குற்றுயிராய்த்
துண்டமிட்டு மண்ணில் வீழ்த்திய
மாபாதகம் என்னென்பேன்?
உன் காலடிக் கரையான்களுடன்
நாளும் நான் தொடுத்த தொடர்போரின்
முடிவும் இதுதானோ?
ஆம்! என்மரமே! என்மனமே!
மனிதக் கரையான்களுடன்
நான் தோற்றுப் போனேனே!
விறகுக்காய் அலைந்த
வியாபாரக் கண்ணிரண்டின்
வஞ்சக வார்த்தைகளால் வீழ்ந்த
வானுyaர்ந்த வனப்பே!
அருகிருந்த கிணற்று நீரை
ஆசையோடு ஆழ்வேரால் நீ நலம் கேட்க
அதைக் காட்டி உன் உயிர் பறித்தார்;
இம்மனிதர்களின் உயிர் மூச்சும்
நின நாற்றம் வீசுகையில் [ninna]
உன் மரணச் சிதைவும்
மருந்தாய் மணமாய் அன்றோ
நெஞ்சை நிறைக்கின்றது!
வானத்துள் கனவாய் அடக்கமாய்த்
தாய்மை நெறிகளோடு தவமிருந்த மாமருந்தே!
மண்ணுள் வேர்நடுங்க நீ கதறும் மொழி
இங்கு எவர் காதும் சேராதே!
உனது கனவுகள் --
மொக்குகளாய் ,மலர்களாய் ,
பச்சிலைக் கொழுந்துகளாய்,
பிஞ்சுக் கனிகளாய் எல்லாமே
மண்ணில் மெல்லக் குவியலாய்
இதோ மாயத் துவங்கினவே!
மெல்லமெல்ல மரணத்தின் வாசகங்கள்
உருண்டுவிட்ட உச்சிக் கொப்புகளில்
படிக்கப் பெறுகையிலே
பசுமை பழம் நினைவாகி
உனைச் சாவு அசை போடுதம்மா!
உன் அழகிய கொப்புகளில் இதுகாறும்
சதா சளச்சளத்த பறவை எல்லாம்
இதோ அணி அணியாய்ஆழ்மௌனம் அணிந்து
அருகிருக்கும் மரங்களில் சோகம் காத்தனவே!
சூழ நிற்கும் சிறுமரங்கள் இக்கதி கண்டு
மரணக் கனவுகளில் மூழ்கினவே!
மரணத்தின் அணைப்பில் மயங்கிவிட்ட மரமே!
சற்றே பேசட்டுமா உன்னோடு?
என்னுடன் கண்ணீர் திரட்டவும்கூட
எவர்க்கும் இங்கு இதயமில்லை!
செங்கிஸ்கான் தைம்மூரின் வர்க்கங்களாய்
கோடரிக் கூச்சல்களை இவ்வுலகம் ரசிக்கின்றதே!
இவர்கள் வேரில் நீர் வார்த்தவர்கள் அல்லவே!
உனதன்பில் அனுதினமும் உலவியவர் அல்லவே!
கிளைகளுக்கு மகப்பேறு பார்த்தவர்களும் அல்லவே!
இலை மழலைகளை நெஞ்சில் தாங்கியோரும் இல்லையே !
தலைக்கு விலைபேசும் கொடுமை இது நன்றோ?
விதைமட்டும் எறிந்தவர்கள் இவர்கள்!
மற்றதை மழையன்றோ பார்த்துக் கொண்டது!
பலன் என்று எவர்க்கிங்கு உரிமை?
நாம் வீடு வளர்க்கும் மனிதப் பாறைகள்தானே!
மரஉன்னதங்கள் இங்கு வென்றிடக் கூடுமோ?
நம்மில் பலர் விதைக்கையிலேயே உடலை
எடைபோடத் துடிப்பவர்தானே?
இறுகிய மண்ணுள்ளும் நேயம்பேசி
பாதை பலவிரிக்கும் உன் வேதனைகள்
இடம்மாறி ஓடும் நடமாடும் மாந்தர்க்கு
எப்படிப் புரியும்?புரிந்திடவும் இசைவரோ?
விலை இலா மாந்தர் நாங்கள்
விலை வைப்பதாலேயே
விலை மதிப்பற்றவை
மரணத்திற்கு விலையாகின்றன !
வீழ்ந்துவிட்ட உயர்மரமே!
உனை அனைத்துக் கதறுகின்றேன் !
தலைபற்றிப் பறித்து விலைபேசிப் போவார் என்றோ
வேரினுள் உயிரைவைத்து அதையும் ஆழ
மண்ணினுள் மறைத்து வைத்தனன் இறைவன்?
மாந்தரின் சோம்பல் வகைவகையாய் அறிந்தவன்தான்!
பாத வேர்களில் பாய்ந்தோடும் கண்ணீரே!
என் மரத்தை ,இம்மருந்தை மறுபடி
பன்மடங்காய் வான் உயர்த்திக்காட்டு!
சூரியனே!
பலகோடிப் பொன் கரங்களாலே
புதுமைப் பசுமைதனைத் தூக்கி நிறுத்திவிடு!
------சந்திர கலாதர்
No comments:
Post a Comment